இந்தியாவில் பணிபுரியும் பேஸ்புக் உயர்மட்ட அலுவலர்கள், பாஜக மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், பேஸ்புக் நிர்வாகி அங்கி தாஸ், மோடியின் பேத்தி என்றழைக்கப்படுவதாக பிரபல பத்திரிகையான 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டது. இச்செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரத்தை முன்வைத்து ”சமூக வலைதளங்களை பாஜக கட்டுப்படுத்துகிறது” எனவும் காங்கிரஸ் விமர்சித்தது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, ”பேஸ்புக் நிறுவனத்துடனான பாஜகவின் தொடர்பு நாளுக்கு நாள் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அங்கி தாஸ் போன்ற பேஸ்புக் நிர்வாகிகள், பாஜக மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்டது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.