டெல்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவரும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான 71 வயதான அகமது பட்டேல், கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நான் எனது சகாவை இழந்துள்ளேன். அவர் தனது வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணித்து உழைத்தவர்.
ஒவ்வொரு பணியிலும் முழுமையாக, உண்மையாக அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர். அவரின் பெருந்தன்மை உள்ளிட்ட அரிய குணங்கள் அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியது.
நான் நம்பிக்கைக்குரிய 'சகா'வை, நண்பனை இழந்துள்ளேன். அகமது பட்டேலின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்று கூறியுள்ளார்.
ஜேபி நட்டா
பாஜக தலைவர் ஜேபி நட்டா தனது இரங்கல் செய்தியில்,காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.
அவருடைய குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கு இந்த கடின நேரத்தில் வலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், அகமது பட்டேலின் இறப்பு குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய ஆன்மா அமைதி கொள்ளட்டும்” என இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி
இது துயரமான தினம். அகமது பட்டேல் காங்கிரஸின் தூண். அவரின் வாழ்வும், மூச்சும் காங்கிரஸ். பல கடினமாக நேரங்களிலும் கட்சியோடு துணை நின்றார். அவர் மதிப்பிடமுடியாத சொத்து.
நாங்கள் அவரை இழந்துள்ளோம். பைசல், மும்தாஜ் மற்றும் குடும்பத்தினருக்கு எனது அன்பையும் இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரியங்கா காந்தி
அகமது பட்டேல் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மும்தாஜ், உங்கள் தந்தையின் சேவை அளவிட முடியாதது. நாம் அனைவருக்கும் இது பேரிழப்பு. அவரின் இழப்பை தாங்கும் வலிமையை அவர் அளிக்கட்டும்.
கபில் சிபல்
சகோதரன் அகமதுவின் மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நாங்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள். அவரது இழப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் வேதனை அளிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில் அவர் மையமாக திகழ்ந்தார். கட்சிக்காக அவர் அளித்த பங்களிப்பு என்றென்றும் நினைவுக் கூரப்படும். அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.
ப.சிதம்பரம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், பொருளாளர் மற்றும் என் 30 ஆண்டு கால இனிய நண்பர் அகமது பட்டேல் அவர்களின் மறைவு எனக்கும் மற்ற எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அவருடைய உடல் மற்றும் உள்ளத்தின் ஒவ்வொரு அணுவிலும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் ஊடுருவியிருந்தன.
20 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத வலுவான தூணாக அகமது படேல் விளங்கினார் அவருடைய ஆன்மா அமைதி அடைவதாக!
இவ்வாறு பல்வேறு கட்சி தலைவர்களும் அகமது பட்டேலின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது பட்டேல் அக்டோபர் 1ஆம் தேதி கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை நவம்பர் 15ஆம் தேதி திடீரென மோசமடைந்தது.
இதையடுத்து குர்கான் மேதன்தா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸின் மற்றொரு மூத்தத் தலைவரான, அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் கோவிட்-19 பெருந்தொற்று உள்ளிட்ட சுகாதார பிரச்னை காரணமாக உயிரிழந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் காலமானார்!