பாஜக அரசு "நாட்டைப் பிளவுபடுத்தும் மற்றும் சீர்குலைக்கும்" கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதாக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 'நாட்டைக் காப்பாற்றுங்கள்' (BHARAT BACHAO) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், போராட்டங்கள் தீவிரமடைந்ததையடுத்து, அப்பகுதியில், இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தக் கோரியும் காங்கிரஸ் சார்பில் உலகம் தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது, மோடி அரசின் தோல்விகள் குறித்து அக்கட்சியின் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.