காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலையடுத்து, ஓய்வெடுப்பதற்காக திடீரென வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் எந்த நாட்டிற்குச் சென்றுள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அவர் கம்போடியாவிற்குச் சென்றுள்ளதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ராகுலின் இந்தத் திடீர் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் வட்டாரங்கள் விமர்சித்துவருகின்றன. ராகுல் காந்தி வெளிநாடு சென்றது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகக் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் பிரணவ் ஜா, “இந்திய ஜனநாயகத்தின் படி, பொதுவாழ்விற்கும் தனிப்பட்ட வாழ்விற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. ஒரு தனி மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி பூதாகரமாக்க முயற்சி செய்பவர்களை, தனி மனிதனின் சுதந்திரத்திற்கும் மதிப்பு அளிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ”ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து, இரு மாநிலங்களிலும் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.