டெல்லி: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ள முரண்பாட்டு கருத்துகள் 24 மணி நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி கோவிட் தடுப்பூசி பணிகளை ஆய்வு செய்ய சனிக்கிழமை (நவ.28) ஆமதாபாத், ஹைதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் கோவிட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்தினார்.
இதனை விமர்சித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டில், “விமானத்தில் வானில் பறப்பதை விட, பிரதமர் நரேந்திர மோடி சாலையில் பயணித்து விவசாயிகளின் பிரச்னைகளை கேட்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா தொடர்ச்சியான தனது ட்வீட்களில் பிரதமர் நரேந்திர மோடி -க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அந்த ட்வீட்டில், “பிரதமர் நரேந்திர மோடியின் செயல், தடுப்பூசி தயாரிக்கும் நிபுணர்களுக்கு ஊக்கம் அளிக்கும், தடுப்பூசி பணிகள் நிறைவடையும்பட்சத்தில் இந்திய மருத்துவ விஞ்ஞானிகளின் பணிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்” எனக் கூறியிருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸின் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய மூத்தத் தலைவர்களுள் ஆனந்த் சர்மாவும் ஒருவராவார். இதனால் அவரின் கருத்து உள்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது செயலுக்கு ஆனந்த் சர்மா விளக்கம் அளித்துள்ளார். அதில் முந்தைய ட்வீட்கள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்டன. இதனால் தேவையில்லாத சில குழப்பங்களும் ஏற்பட்டுவிட்டன.
எனது உண்மையான ட்வீட் இதுதான் என மற்றொரு ட்வீட் செய்துள்ளார். அதில், “இந்த நிறுவனங்கள், பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டியதுடன் இந்தியாவிடம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக மாறும் திறனும் உள்ளது என ஆனந்த் சர்மா தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: வாரணாசி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!