230 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்திற்கு 2018ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 116 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இருப்பினும், 114 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ், நான்கு சுயேச்சை, இரண்டு பகுஜன் சமாஜ், ஒரு சமாஜ்வாதி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க மூன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட எட்டு உறுப்பினர்களை வளைத்துப்போட பாஜக முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. குதிரைபேரம் நடத்த கோடிக்கணக்கான ரூபாயை பாஜக செலவழிப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.
அண்மையில் 10 காங்கிரஸ் எம்ஏல்ஏக்கள் காணாமல் போயிருந்தனர். பாஜகவினர்தான் இவர்களைக் கடத்திவைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டிவந்தனர். காணாமல்போன 10 எம்எல்ஏக்களில் 6 பேர் திரும்பினர். ஆனால், மீதம் உள்ள 4 பேர் இன்னும் போபாலுக்குத் திரும்பவில்லை.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் ஹர்தீப் சிங் டாங் சிங் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் கமல்நாத் அரசுக்குப் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. நேற்று இரவு தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில சட்டப்பேரவை அவைத்தலைவர் நர்மதாவிற்கு அனுப்பியுள்ளார். இவர் சுவஸ்ரா தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
இதையும் படிங்க:'பாஜக ஒரு அரசியல் வேட்டைக்காரன்' - ஆதீர் ரஞ்சன் சௌத்ரி