அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர் மனைவி, மகளுடன் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வருகைதந்தார். விமானத்தில் வந்திறங்கிய ட்ரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சபர்மதி ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்.
ஆசிரமத்தைப் பார்வையிட்ட பிறகு, மொடீரா மைதானத்தில் நடைபெற்ற ’நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் உத்தரப் பிரதேசத்திற்குச் சென்ற ட்ரம்ப், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை தன்னுடைய குடும்பத்தினருடன் கண்டுகளித்தார்.
பயணத்தின் இரண்டாம் நாளான இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ட்ரம்ப் சென்றார். அங்கு அவருக்கு முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசிய ட்ரம்ப், ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்திற்குச் சென்றார்.
ட்ரம்ப் பயணத்தின் இறுதி நிகழ்ச்சியான, குடியரசுத் தலைவர் விருந்து இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்பிதழை ஏற்றுக்கொண்ட மன்மோகன் சிங், தன்னால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை என குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் தகவல் கூறியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், குலாம் நபி ஆசாத், அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகிய இருவரும், ட்ரம்ப் விருந்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்படாததால், தாங்கள் விருந்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
விருந்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் முறைப்படி அழைப்பு வந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத அரசியல் பணிகளால் தன்னால் விருந்தில் கலந்துகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துவிட்டார். இதேபோல், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் பட்ஜெட் தயாரிப்புப் பணிகளுக்காக விருந்தில் கலந்துகொள்ள இயலவில்லை எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:ட்ரம்ப்புக்கு அகமதாபாத்தில் ‘நமஸ்தே’, கொல்கத்தாவில் ‘கோ பேக்’ - நெட்டிசன்களின் அடாவடி