இது தொடர்பாக ஊடகங்களை சந்தித்துப் பேசிய அவர், "கர்நாடக, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிசையில் கடந்த ஜூலை மாதத்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் விரிசல் ஏற்பட்டது.
முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மேல் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கு ஏற்பட்ட மனக்கசப்பால் அவரது ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது.
அப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழாமல் பார்த்துக்கொண்டது பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே தான்.
காங்கிரசைச் சேர்ந்த அசோக் கெலாட்டோடு இணைந்து பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே செயல்பட்டதால் தான் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு வீழ்ச்சியடையவில்லை.
வசுந்தரா ராஜேவுடைய ஆதரவாளர்களான 20 பாஜக எம்.எல்.ஏ.க்கள் அசோக்கிற்கு ஆதரவளிப்பர் என அவர் உறுதியளித்திருந்தார்.
முன்னாள் முதலமைச்சர்கள் தங்களுக்கு அரசு அளித்த பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளன.
இருந்தபோதிலும், முன்னாள் முதலமைச்சர்கள் அரசின் பங்களாக்களில் வாழ அனுமதிக்கும் புதிய மசோதாவை அசோக் கெலாட் கொண்டுவந்தற்கு ராஜே கைமாறாக இந்த உதவியை செய்வதாக இருந்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக "வசுந்தரா-கெலாட்" இருவரும் கொண்டிருக்கும் அரசியல் உறவு காரணமாக ராஜஸ்தான் அரசியலே கும்பல் கலாச்சாரத்திற்குள்ளாகி சீரழிந்து அழிவின் பாதைக்கு சென்றது.
முந்தைய வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசில் அதிகாரத்தில் இருந்த அலுவலர்கள் தான் தற்போதைய கெலாட் அரசிலும் அதிகாரத்தில் உள்ளனர்.
இந்தக் கூட்டணி விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் தான் ராஜஸ்தான் முன்னேறும். அந்த பொறுப்பை ஆர்.எல்.பி கையில் எடுத்துள்ளது" என்றார்.