இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவமும் மோதிக்கொண்டதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இதுகுறித்து ஆலோசனை நடத்தும் வகையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சீனா, நேபாளம் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள பூசல், கரோனா பேரிடர், பொருளாதார பாதிப்பு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை அக்கட்சி மேலிடம் மறுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "கட்சியின் தொண்டர்களிடையே இக்கருத்து நிலவினாலும் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படவில்லை. சீன பிரச்னை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கரோனா பேரிடர் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன" என்றார்.
கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலும் இதனை மறுத்துள்ளார். காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் விலகினார்.
இதையும் படிங்க: சீனப் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் - மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்!