மகாராஷ்டிராவில் அரசியல் களம் நொடிக்கு நொடி விறுவிறுப்பாக நகர்ந்துசெல்கிறது. அம்மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் யார்? எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்று அம்மாநில மக்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, பாஜகவிற்கு அடுத்து பெரும்பான்மை தொகுதிகளைப் பெற்றிருக்கக்கூடிய, அடுத்தடுத்த இரு பெரும் கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
மொத்தமுள்ள 288 தொகுதிகளில், ஆட்சி அமைக்கத் தேவையான 145 சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் அக்கட்சிகளால் ஆளுநர் கொடுத்த கால அவகாசத்திற்குள் ஆட்சியமைக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிராவில், ஆளுநரின் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கட்சி வழக்கு தொடர்ந்திருக்கிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவிற்கு ஆதரவு அளித்த நிலையில், இந்த முக்கியமான தருணத்தில் மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் முக்கியத் தலைவர்களான மல்லிகார்ஜுனா கார்கே, பிரபுல் பட்டேல், அகமது பட்டேல், கே.சி. வேணுகோபால், சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதில் ஆட்சி பொறுப்பு, பதவி பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. முக்கியமாக சிவசேனாவிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்தாண்டுகள் வரை, துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகிறது.
அதையடுத்து கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவிக்கையில், 'ஆளுநர் தற்போது போதிய கால அவகாசம் அளித்துள்ளதால், ஆட்சியமைப்பதில் எந்த ஒரு அவசரமும் இல்லை. மேலும் சிவசேனாவிடம் நன்கு ஆலோசனை செய்த பிறகே இறுதி முடிவு எட்டப்படும்' என்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது மௌனத்தை கலைக்கும்விதமாக ட்விட்டரில் தெரிவித்ததாவது, 'மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியது துர்பாக்கியமானது. மேலும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சிவசேனா கூட்டணி விரைவில் ஆட்சியமைக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்க: குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை: உச்ச நீதிமன்றத்தை நாடிய சிவசேனா!