வளரும் நாடுகளின் பொருளாதார வளர்சிக்காக ஜிஎஸ்பி எனும் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா அளித்து வருகிறது. ஜிஎஸ்பி முன்னுரிமை பெற்ற நாடுகள், தங்களது பொட்களை வரிச் சலுகைகளோடு அமெரிக்காவில் இறக்குமதி செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் நியாயமற்ற முறையில் அதிக வரி விதிப்பதாகக் கூறி, நம் நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎன்பி சிறப்பு உரிமையை அமெரிக்கா 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரத்து செய்தது.
ஏற்கனவே இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உரசல்கள் நிலவி வந்த சூழலில், அமெரிக்காவின் நடவடிக்கை உறவை மேலும் கசப்பாக்கியது.
இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை இந்தியா வரவுள்ள நிலையில், ஜிஎஸ்பி-யை திரும்பக் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவால், "1974ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக சிறப்பு உரிமையை (ஜிஎஸ்பி) அமெரிக்கா 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது. இதன் காரணமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசி, ஆபரணங்கள், ரத்தினம், லெதர் என சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
'ஹவுடி மோடி'யைத் தொடர்ந்து தற்போது 'நமஸ்தே ட்ரம்ப்' நடைபெறவுள்ளது. ஜிஎஸ்பி-யை திரும்பிக்கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயற்சிப்பாரா ?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ட்ரம்ப் வருகையையொட்டி ஜிஎஸ்பி குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது இது முதல் முறையல்ல.
முன்னதாக, வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஆனந்த் ஷர்மா, "அமெரிக்க அதிபரின் பயணத்தின் போது வெறுமே புகைப்படம் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தி, இருநாட்டு உறவையும் கொச்சைப்படுத்தக்கூடாது. இது நாட்டின் நலனுக்கும் குந்தகம் விளைவிக்கும். ஜிஎஸ்பி உரிமை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : இந்தியா - அமெரிக்கா உறவு எப்படிப்பட்டது? - சிறு தொகுப்பு