இரும்புத் தாது ஏற்றுமதி முறைகேடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
மேக் இன் இந்தியா குறித்து பிரதமர் மோடி பேசினாலும், இந்தியாவை விற்கவே அவர் முயற்சி செய்து வருகிறார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், " இரும்புத் தாதுக்களில், அதிகபட்சமாக 64 விழுக்காடு இரும்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. 2014 ஆம் ஆண்டு, மோடி அரசு ஆட்சி அமைத்த பிறகு, இந்த வரம்பை உருக்கு அமைச்சகம் நீக்கியது.
அதுமட்டுமில்லாமல், சீனா, தாய்வான், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இரும்பு தாதுக்களை ஏற்றுமதி செய்ய குத்ரேமுக் இரும்புத்தாது நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. அதற்கு 30 விழுக்காடு வரியே தொடரும் எனவும் கொள்கை வகுக்கப்பட்டது. ஆனால், இரும்புத்தாதுக்களை இரும்புத் துகள்களாக மாற்றி ஏற்றுமதி செய்தால் அதற்கு வரி கிடையாது.
ஏற்றுமதி செய்வதற்கு குத்ரேமுக் இரும்புத்தாது நிறுவனத்திற்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த போதிலும், பல தனியார் நிறுவனங்கள் இரும்புத் துகள்களை ஏற்றுமதி செய்து வருகிறது. வரி எதுவும் இல்லாத காரணத்தால் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன.
மத்திய அரசுக்கு தெரிந்தே இந்த முறைகேடு நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களை உறுப்பு அமைச்சகம் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. 2014ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரும்புத்தாதுக்களை இந்த தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இரும்புத்தாதுக்களை சட்டவிரோதமாக உரிமமின்றி ஏற்றுமதி செய்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு பக்கப்பலமாக இருந்த இயற்கை வளத்தைக் கொள்ளையடிக்க அரசு அனுமதி தந்துள்ளது. இதில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களின் பெயர்களை பிரதமர் மோடி வெளியிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:முதல்ல மூங்கில் பிஸ்கட், இப்ப மூங்கில் அரிசி: மூங்கிலைக் கொண்டாடும் திரிபுரா!