லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இருதரப்பும் தத்தமது படைகளை, அங்கு அதிக அளவில் குவித்துள்ளன.
இந்நிலையில், எல்லைப் பதற்றத்தைக் குறைப்பது குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5ஆம் தேதி) பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், எட்டப்பட்ட உடன்படிக்கையை அடுத்து, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட முக்கிய எல்லைப் பகுதிகளிலிருந்து இருதரப்பு ராணுவமும் விலகியுள்ளன.
இந்நிலையில், சொந்த மண்ணிலிருந்தே ராணுவ வீரர்களை விலகச் சொன்னதன் காரணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பழைய ட்வீட்டை மேற்கோள்காட்டி ட்வீட் செய்திருந்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, "மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நீங்கள் சொன்ன வார்த்தைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த வார்த்தைகளின் அர்த்தம் நினைவிருக்கிறதா? சொந்த மண்ணிலிருந்து நம் ராணுவ வீரர்கள் ஏன் விலக வேண்டும்? நாட்டு மக்கள் உங்களது பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என அடுக்கடுக்காகக் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதே போன்று, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூரும் இந்த ட்வீட்டை சுட்டிக்காட்டி, "நான் மோடியின் வார்த்தைகளை மதிக்கிறேன். இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, 2013 மே 3ஆம் தேதி, "சீனப் படைகள் விலகுகிறது சரி, பிறகு இந்திய மண்ணிலிருந்து நம் ராணுவப் படையினர் ஏன் பின்வாங்குகின்றனர்?" என அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கேள்வியெழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கிண்டியில் அதிநவீன கரோனா மருத்துவமனையை திறந்து வைத்த முதலமைச்சர்...!