பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமை வகிக்கும் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெற்று ஆட்சி நடத்திவந்தது. சில நாள்களிலேயே, இக்கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், பீகாரில் உள்ள ஐந்து மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில், பாஜக, ஐக்கிய ஜனதா தள கூட்டணி மூன்று பதவிகளை கைப்பற்றவுள்ளது. மீதமுள்ள இரண்டு உறுப்பினர் பதவியை ராஷ்டிரிய ஜனதா தளம் தட்டிச் செல்லவுள்ளது. ஆனால், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தங்களுக்கு வழங்கும்படி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.