பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதை உணர்த்துவதற்காக, ஹர்திக் படேல் டிவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்பாக வேலையற்ற என்ற வார்த்தையை இணைத்துள்ளார்.
பிரதமர் மோடி சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்பாக சவ்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். தான் நாட்டின் பாதுகாவலன் என அவர் குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து பாஜகவினர் மற்றும் அமைச்சர்கள் பலரும் சவ்கிதார் வார்த்தையை பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்காக போராடிய ஹர்திக் படேல், டிவிட்டர் பக்கத்தில் பெரோஜ்கர் என்ற வார்த்தையை தனது பெயருக்கு முன்பாக சேர்த்துள்ளார். பெரோஜ்கர் என்றால் வேலையற்ற என்ற பொருளை உணர்த்துகிறது.
இதன்மூலம் மோடியின் ஆட்சியில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதை அவர் விமர்சனம் செய்துள்ளார். மோடி அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தவறியதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஹர்திக் படேல் சமீபத்தில் அம்மாநில காங்கிரஸில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசு மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.