புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரைக் கூட்ட காங்கிரஸ் கோரிக்கைவிடுத்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் மனிஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். பொருளாதாரம் மந்தநிலையை அடைந்துள்ளது. நமக்கு;d சொந்தமான 1000 கி.மீ. நிலபரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது.
கடந்த எட்டு மாதங்களில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 லட்சத்தை நெருங்கியுள்ளது. 1.83 லட்சம் பேர் உயிரிழந்தனர். எனவே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை எந்த தாமதமும் இன்றி அரசு உடனடியாக கூட்ட வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டுவது அவசியமாகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, டிசம்பர் 4ஆம் தேதி, கரோனா தடுப்பூசி விநியோகம் செய்வது குறித்து விவாதிக்கும் நோக்கில் அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.