தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இந்தியாவில் இது புதுசு' - ஆம் ஆத்மி முன்வைக்கும் நவீன அரசியல் என்ன?

ஹைதராபாத்: மத, இன, மொழி, சாதி ஆகிய அடையாளங்களை முன்வைத்தே சுதந்திர இந்தியாவின் அரசியல் மையம் கொண்டிருந்த நிலையை மாற்றி, நல்லாட்சி என்ற புள்ளியை அடிப்படையாகக் கொண்டு உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரசியல், டெல்லியில் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

By

Published : Feb 11, 2020, 11:09 PM IST

Updated : Feb 12, 2020, 3:14 PM IST

நாடு இன்று கெஜ்ரிவால்களைத் தேடும் நிலைமையில் உள்ளது. முன்பெல்லாம் நல்லவன் யாராவது கிடைத்தால், ’என் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்’ என்று கூறிய காலம் போய், ’முதலமைச்சர் நாற்காலி காலியாக இருக்கு, நாடு ஆள வா எனக் கெஞ்சும் நிலைக்கு இன்றைய அரசியல் உள்ளது' என ஐந்தாண்டுகளுக்கு முன் துக்ளக் விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் மூத்த அரசியல் தலைவருமான பழ. கருப்பையா கூறினார்.

பழ. கருப்பையா அன்று சொன்னதை மெய்ப்பிப்பது போல் டெல்லி மக்கள், இரு பெரும் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றை நிராகரித்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரமாண்ட வெற்றியை தற்போது மீண்டும் பரிசளித்துள்ளனர். 'நாட்டின் இன்றைய அரசியல்' என்ற தலைப்பில் அன்று நடந்த கருத்தரங்கில் பழ. கருப்பையா கெஜ்ரிவால் குறித்து இக்கருத்தை முன்வைத்தார். இந்தப் புள்ளியில்தான் கெஜ்ரிவால் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி, முன்வைக்கும் நவீன அரசியல் மையம் கொண்டுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி என்பதன் பொருள் 'காமன் மேன்' (பொது மனிதன்). தலைசிறந்த கேலிச் சித்திரக்காரரான ஆர்.கே. லக்ஷ்மண் மூலம் 'காமன் மேன்' (சாமானியன்) என்ற சொல் இந்திய அரசியல் தளத்தில் முகம் பெற்றது. நாட்டில் நடக்கும் சமூக அரசியல் சிக்கல்களை 'காமன் மேன்' என்ற கதாபாத்திரம் பகடி செய்வதாக தொடர்ச்சியாக, கேலிச் சித்திரம் வரைந்து லக்ஷ்மண் பொது மனிதனை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இந்த காமன் மேன் அடையாளங்களைக் கடந்தவன். 'இந்தியவில் வசிப்பவன்' என்பது மட்டுமே இவனுக்கு இருக்கும் ஒரே அடையாளம். சுதந்திர இந்தியாவின் அரசியல், காங்கிரசில் தொடங்கியதால், காங்கிரஸ் மற்றும் காங்கிரசுக்கு எதிரான கொள்கை நிலைப்பாடுகளை முன்வைக்கும் தேசிய, பிராந்திய கட்சிகளைக் கொண்டே கடந்த 72 ஆண்டுகளாக உருமாறி வந்துள்ளது. இதில் தேசியக் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் சோசியலிச இடதுசாரி கொள்கை, வலதுசாரி கொள்கை என்றும், பிராந்திய அரசியல் கட்சிகள் என்றால் இனம், மொழி, சாதி ஆகியவற்றை முன்னிறுத்தியே கட்சிகள் உருப்பெற்று இயங்கிவருகின்றன. அதாவது அடையாள அரசியலை முன்னிறுத்தியே பெரும்பாலான இந்திய அரசியல் கட்சிகள் இயங்கிவருகின்றன.

ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையின் போது கெஜ்ரிவால்

Divide and Rule என்ற கோட்பாட்டைக் கொண்டே பெரும்பாலான அரசியல் கட்சிகள் அதிகாரத்தை நோக்கி நகரும். மக்களை அடையாளப்படுத்தி எதிர் தரப்பு ஒன்றை முன்வைத்து, அதற்கு எதிராக அவர்களை அணி திரட்டி வாக்கு வங்கிகளாக மாற்றுவதே அடையாள அரசியல். அடையாளத்தின் மூலம் உணர்வுகளைத் தூண்டி, மக்களை தன் பக்கம் இழுத்து அரசியல் செய்வது எளிது.

ஆனால், நல்லாட்சி வழங்கவே அரசும், அதைச் சார்ந்து இயங்கும் அரசியலும் என்ற அடிப்படையை, அந்தக் கட்சிகள் மறந்து, தங்களின் 'நிரந்தர வாக்கு வங்கிகள்' என்ற கூண்டுக்குள் மக்களைத் தள்ளிவிடுகின்றன. தங்களின் உணர்வுகளை குத்தகைக்கு எடுத்து தங்களின் அதிகாரப் பசிக்குத் தீனி போட்டுக்கொள்ளும் கட்சிகளால் மக்கள் விரக்திக்கு தள்ளப்படுவதே இதன் இறுதி நிலை.

கெஜ்ரிவாலை போலவே மஃப்லர் மேன் தோற்றத்தில் குழந்தை

இந்தச் சூழலில்தான் 2012ஆம் ஆண்டு உதித்த, ஆம் ஆத்மி கட்சி நவீன காலத்திற்கான புதிய அரசியலை முன்வைத்து நகர்ந்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்ட மத, இன, மொழி, சாதி, வலது, இடது என எந்த அடையாளத்திலும் தன்னை சிக்கவைத்துக்கொள்ளாமல், நல்ல நிர்வாகம் என்ற முழக்கத்தை, முன்வைத்து புதிய அரசியலை இந்தியாவுக்கு அளித்துள்ளது. ஆனால், இந்த அரசியல், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் எப்படி சாத்தியப்பட்டது என்றால், அதன் களம் தலைநகர் டெல்லி என்பதே காரணம்.

'காஸ்மோபோலிட்டன்’ தன்மை கொண்ட டெல்லி பல்வேறு மாநிலங்களில் இருந்து குடியேறிய பல்வேறு சமூகங்களை உள்ளடக்கியது. பல்வேறு மக்களால் கட்டமைக்கப்பட்ட அந்நகரவாசிகள் தங்களின் நல்வாழ்வுக்குத் தேவை நல்லாட்சி என்ற நோக்கம் கொண்டவர்கள். பெரும்பாலானவர்கள், படித்த நவீன மக்கள் என்பதால் தங்களின் அடையாளங்களை, எளிதில் கடந்து நல்ல நிர்வாகத்திற்கான ஆட்சியை தேர்வு செய்யும் பக்குவத்தைப் பெற்றுள்ளனர்.

தேர்தல் பரப்புரையில் கெஜ்ரிவால்

இதன் காரணமாகத்தான், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசியல் டெல்லியில் இரண்டு தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. அனைத்து இயக்கங்களைப் போலவே, ஆம் ஆத்மியும் தடுமாற்றத்தையும் சறுக்கல்களையும் கடந்த எட்டாண்டுகளில் சந்தித்துள்ளது. தனது அளவு உயரம் தெரியாமல் 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாடு முழுவதும் களமிறங்கியது. டெல்லி ஆட்சியைக் கிடப்பில் போட்டுவிட்டு பஞ்சாப், கோவா போன்ற மாநிலங்களில் காலூன்ற நினைத்தது, ஆம் ஆத்மிக்கு படு தோல்வியையே பெற்றுத்தந்தது.

தனது வாக்குறுதியான நல்லாட்சியை மறந்து நடைபோட்ட ஆம்ஆத்மிக்கு 2019ஆம் ஆண்டு, உள்ளாட்சித் தேர்தலில் டெல்லி மக்கள் தோல்வியைப் பரிசளித்து அதிர்ச்சி வைத்தியம் தந்தனர். ஆனால், தோல்வியில் பாடம் பெற்றுக்கொண்ட கெஜ்ரிவால், அதன்பின்னர் டெல்லி ஆட்சி நிர்வாகத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். மதவாதத்தை முன்னிறுத்தி Polaraization அரசியல் அனல் கக்கிய 2020ஆம் ஆண்டு டெல்லி அரசியலில், கெஜ்ரிவால் மாடல் என்ற நல்லாட்சி அரசியலை மக்களின்முன் வாக்குறுதியாக முன்வைத்தார். டெல்லி மக்களும் அவரது நம்பிக்கையை வீணடிக்கவில்லை.

வெற்றிக் களிப்பில் ஆம் ஆத்மி

’நிரந்தர வாக்கு வங்கி என்ற பேச்சில்லை, ஒழுங்காக வேலைசெய்து நல்லாட்சி கொடுத்தால், உனக்கு வெற்றி’. இதுவே, ஆம் ஆத்மி மாடல் அரசியலில் காணப்படும் நல்ல அம்சம்.

'நீ நல்லவன், தலைநகர் டெல்லி அரியணையில் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீயே ஆட்சி செய்' என அடையாளங்களைக் கடந்து, மக்கள் கெஜ்ரிவாலை மீண்டும் வெற்றி இருக்கையில் அமரவைத்துள்ளனர். இது இந்தியாவுக்குப் புதிய அரசியல், நவீன காலத்தின் அரசியல், ஐந்தாண்டுகளுக்கு முன்பு பழ. கருப்பையா பேசிய தலைப்பான (தலைநகர் டெல்லியின்) இன்றைய அரசியல்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் நடைபெற்ற ஆசியாவின் மிகப் பெரிய ஆதிவாசி திருவிழா

Last Updated : Feb 12, 2020, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details