கரோனா வைரசுக்கு எதிரான ஐசிஎம்ஆர் தடுப்பூசி உருவாக்கம் மற்றும் நெறிமுறைகள் குறித்த முன்னணி தடுப்பூசி ஆராய்ச்சியாளர்களின் காணொலி கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் தடுப்பூசி வளர்ச்சியில் உள்ள சவால்கள், வாய்ப்புகள் குறித்து விவாதிக்க 250க்கும் மேற்பட்ட முன்னணி அறிவியலாளர்கள், பொதுச் சுகாதாரத் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா, "உலகளாவிய அசுச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. அந்தத் தடுப்பூசி சரியான நேரத்தில் உலகளவில் கிடைப்பதை உறுதிசெய்வதில் சர்வதேச அறிவியல் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
சராசரியான காலங்களைக் காட்டிலும் இந்தக் காலக்கட்டம் மிகவும் சவாலானது. அத்தகைய சூழலில், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியின் வளர்ச்சியை உறுதிசெய்வது, அதன் வளர்ச்சி நுட்பங்களுக்கான வெவ்வேறு அணுகுமுறைகளின் சிறப்பைப் புரிந்துகொள்வது, மாறுபட்ட சரிபார்ப்பு அணுகுமுறைகள், அவை அனைத்தையும் சுற்றியுள்ள நெறிமுறைக் கருத்தாய்வு ஆகியவற்றை உள்ளடக்கியவை எவ்வளவு முக்கியமானது என நாங்கள் அறிவோம்.