தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பயண விவரங்கள் ஆகியவற்றை அறிவதற்கு சில தனியார் அமைப்புகளுடன் இணைந்து ஆந்திர பேரிடர் மீட்பு மையத்தினர் புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் கரோனா எச்சரிக்கை கண்காணிப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் அலைபேசி எண்களைத் தொலைத்தொடர்பு வல்லுநர்களுடன் இணைந்து கண்காணித்துவருகிறது. இதில் ஏற்கனவே 25 ஆயிரம் அலைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
இந்தக் கண்காணிப்பு மையத்தின் மூலம், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது இடத்திலிருந்து 100 மீ அளவிற்கு கடந்துசென்றால், உடனடியாக நகராட்சி அலுவலர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.
இதன்மூலம் அவரை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப முடியும். ஒருவேளை இதனை தனிமைப்படுத்தப்பட்டவர் தொடர்ந்து செய்தால், அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.