டெல்லி: சியாச்சின் பனி மலையை பாதுகாக்க உதவிய பனி மலையேறும் வீரர் கர்னல் நரேந்திர 'புல்' குமார் (87) வயதுமுதிர்வு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வியாழக்கிழமை (டிச.31) காலமானார்.
கர்னல் நரேந்திர குமார், கீர்த்தி சக்ரா, பத்மஸ்ரீ, அர்ஜுனா விருது மற்றும் மெக்ரிகோர் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். 1970ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும் சியாச்சின் பனிப்பாறை பகுதியில் பல பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
முக்கியமாக அவரது உளவு அறிக்கைகளின் அடிப்படையில், ஆபரேஷன் மேக்தூட் கீழ் சியாச்சின் உயரங்களை பாதுகாக்கும் பணியை இந்திய இராணுவம் மேற்கொண்டது.
முன்னதாக, சியாச்சின் பனிப்பாறையை இணைப்பதற்கான பாகிஸ்தான் திட்டங்களைப் பற்றிய ஆரம்ப தகவல்களை 1953 ஆம் ஆண்டில் குமாவ்ன் ரெஜிமென்ட்டில் பணியாற்றியபோது நரேந்திர குமார் கண்டறிந்தார்.
ஆகவே இவர் சியாச்சின் மீட்பர் என்று அறியப்படுகிறார். சியாச்சின் பனிப்பாறை பகுதியில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை முதலில் கண்டறிந்தவர் இவர்தான். மேலும், நந்தா தேவி மலையை ஏறிய முதல் இந்தியர் இவர்.