உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சுற்றுச்சூழல் ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘புதுச்சேரியில் சுற்றுச்சூழலை முறையாக வைத்திருக்கவும், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்படியான திட்டங்களையும் சுற்றுச்சூழல்துறை உருவாக்க வேண்டும்.
நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு மகளிர்க்கு உள்ளது. தற்போது வாகனங்கள் பெருகிவிட்டதால் அதிலிருந்து வெளியேறும் புகையால் ஏற்படும் மாசுவை குறைக்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் ஓராண்டிற்கு மின்சாரத்திற்காக ரூபாய் 1,300 கோடி செலவு செய்கிறோம். வீடுகளில் சோலார் பேனல் பொருத்தினால் மின்சாரம் வாங்கும் தொகையை பெரியளவில் சேமிக்க முடியும்.