ராய்ப்பூர் (சத்தீஸ்கர்): பிகாரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு மேற்கு வங்க தேர்தல் வரை நீடிக்கும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் திங்கள்கிழமை (நவ16) தெரிவித்தார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஊடகங்களிடம் கூறுகையில், “பிகாரில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு என் வாழ்த்துகள். அம்மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. இருப்பினும், இது எத்தனை நாள்கள் நீடிக்கும் என தெரியவில்லை? மேலும் சுஷில் குமார் மோடி ஏன் நீக்கப்பட்டார்?
புதிதாக இரண்டு ஜூனியர்கள் ஏன் துணை முதலமைச்சாராக நியமிக்கப்பட்டனர்? பிகார் அரசு மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரை நீடிக்கும் என்ற குரல்கள் இப்போதே ஒலிக்க தொடங்கிவிட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிதின் கட்கரி ஆகியோரை நாளை (நவ18) சந்திக்கிறேன்.
இதில் நிதின் கட்கரியை நாக்பூரில் சந்திப்பேன்” என்றார். மாநிலத்தில் நக்சலைட்டுகள் அதிகரித்து வருகின்றனரே என்ற கேள்விக்கு, “சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டத்தை கண்காணித்து ஒடுக்க மத்திய- மாநில அரசுகள் உறுதி பூண்டுள்ளன” எனத் தெரிவித்தார். பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் நவ.16ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
'பிகார் அரசு மே.வங்க தேர்தல் வரை நீடிக்கும்'- பூபேஷ் பாகல் பிகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து மகா கூட்டணி அமைத்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. அக்கூட்டணியில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 தொகுதிகளில் வென்றிருந்தது.
பிகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: பிகாரின் முதல் பெண் துணை முதலமைச்சர் ரேணு தேவி!