கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டில் மட்டும் விமானங்கள் இயங்கலாம் என விமான போக்குவரத்துத் துறை அறிவித்தது.
நேற்று முதல் நாடு முழுவதும் 532 விமானங்கள் தங்களது சேவையைத் தொடங்கின. இந்நிலையில் தனிநபர் விமானங்கள் செயல்படுவதற்கும் விமான போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கட்டண விவரங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமான சேவைகளுக்கு அறிவிக்கப்பட்ட அதே வழிகாட்டுதல்கள், தனிநபர் விமானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. தனிநபர் விமானங்களில் பயணம் செய்பவர் 45 நிமிடங்களுக்கு முன்னதாக விமான நிலையம் வந்தால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள், வயது மூத்தவர்கள், கர்ப்பிணிகள், மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் உள்ளிட்ட மக்கள் கூடுமான வரை விமான போக்குவரத்தை தவிர்க்க விமான போக்குவரத்துத் துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தாயைக் காண விமானத்தில் தனியாகப் பயணித்த 5 வயது சிறுவனின் பாசம்!