நேற்று உலகம் முழுவதும் புலிகள் தினம் அனுசரிக்கப்பட்ட வேளையில், புலிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கிறார் கர்நாடக வனத்துறையின் முதன்மைப் பாதுகாப்பு அலுவலர் மனோஜ்குமார். இதுகுறித்து அவர் பேசுகையில், “சீன மக்கள் வைத்திருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. அந்த மூடநம்பிக்கைகள் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களை அதிகரித்துள்ளன. இவை வனங்களின் பாதுகாவலனான புலிகளின் இருப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சீனாவில் புலிகளின் தோல், பற்கள், எலும்புகளுக்கு மருத்துவக் குணங்கள் இருப்பதாக அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர். அவற்றைப் பயன்படுத்தி பல்வேறு மருந்துகளைத் தயாரிக்கின்றனர். இதனால் சீனாவில் மேற்குறிப்பிட்டவற்றிற்கு பெரும் தேவை உள்ளதால், அங்கு புலிகள் பெருமளவில் வேட்டையாடப்படுகின்றன.
1994-2000 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவில் 226 புலிகள் வேட்டையாடப்பட்டு, அவற்றிடமிருந்து 1,007 கிலோகிராம் தோல் மற்றும் எலும்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில், புலிகளின் தோல் 20 ஆயிரம் ரூபாய்வரை மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின், வேட்டைக்காரர்கள் அவற்றை ஐந்தாயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, புலிகளின் கொழுப்பானது வாந்தி, நாய் கடித்தல் மற்றும் குழந்தைகளின் மோசமான ஆரோக்கியத்தை சீராக்குவதற்கான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. புலியின் இறைச்சி, மலேரியா காய்ச்சல், பல்வேறு மனநலப் பிரச்னைகள் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
புலிகளின் வால், தோல் பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. புலியின் இறைச்சி, செரிமானம் தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது. இந்த நம்பிக்கைகள் இந்தியாவின் ஒரு சில வட மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது.