கிழக்கு லடாக் பகுதியில் இந்திய -சீன எல்லைப் பிரச்சனை தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், சீன குடிமக்களுக்கான விசாவை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய ஊடகங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்த பரபரபான சூழலில் இந்தியாவுக்கு சீனா எதிரியல்ல என்று சீன ஊடகம் மீண்டும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய தூதரக அதிகாரி, ‘சீனா தனது வார்த்தைக்கு ஏற்ப நடப்பதில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
”எல்லை பிரச்சனைக்கு பிறகு சீனாவுக்கான விசாவை இந்தியா ரத்து செய்வதாக வெளியான தகவல், சீன எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு’ என்ற தலைப்பில் சீனாவின் அரசுக்கு ஆதரவான குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை வெளியானது. அதில், சீனாவின் தொழில்முனைவோர், கல்வியாளர்கள், தொழிற்துறை நிபுணர்கள், சட்டக் குழுக்கள் ஆகியோருக்கான விசாவை இந்திய அரசு ரத்துசெய்யப்போவதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ”
இந்த தகவல் உண்மையாக இருப்பின், எல்லைப் பிரச்சனையை மையப்படுத்தி அரசியல் ரீதியாக சீனாவுக்கு எதிரான உணர்வை ஏற்படுத்தும் செயல்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “சீனாவை தனது எதிரியாக இந்தியா நினைக்கிறது” என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக விவகாரங்களுக்கான செங்டூ மையத்தின் தலைவரான லோங் ஜிங்சுன் கூறியதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “எல்லை பிரச்சனைகளை காரணம் காட்டி சீன நாட்டினரின் விசாக்களை ரத்து செய்வது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. சீனாவுக்கு எதிரான உணர்வுகளை இந்திய மக்களிடம் தூண்டி, அதன் மூலம் தாங்கள் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நாட்டுப்பற்று மிக்கவர்கள் என்பதை வெளிக்காட்டிக்கொள்ள, அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் நடவடிக்கை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில் முதல்முறையாக எல்ஏசி பகுதியில் ஏற்பட்ட இருதரப்ப்பு மோதல்களின் எதிரொலியாக, புகழ்பெற்ற டிக்டாக் உள்பட 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. அதன் தொடர்ச்சியாகவே, சீன நாட்டினருக்கான விசாவையும் இந்திய அரசு ரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பதட்டமான சூழலை மேலும் அதிகரிக்கும் விதமாக, கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் சூ, தெப்சாங் மற்றும் கோக்ரா ஆகிய பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதுகுறித்து இம்மாத தொடக்கத்தில் இந்திய – சீன அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் விசா விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
”ஒவ்வொருமுறை சிக்கல் ஏற்படும்போதும் சீன விசாவை தடை செய்வதை இந்தியா வழக்கமான ஒன்றாகக் கொண்டுள்ளது” என்று லோங் கூறியதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது”.
"கோவிட் -19 மற்றும் சீனாவுக்கு எதிரான உணர்வு ஆகியவை, சீனர்களின் இந்திய வருகையை மட்டுப்படுத்தும். இதனால், பேரிடருக்கு முன்னர் இருந்த இந்திய – சீன உறவுகள் மீண்டும் அதே நிலையில் தொடரும் என்பது சந்தேகமே. அதற்கு ஓராண்டு அல்லது அதற்கு மேல் ஆகலாம்” என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய கல்வி மையங்களின் கூட்டிணைவோடு சீனாவின் கன்ஃபூசியஸ் மையத்தை கட்டமைக்கும் முடிவை இந்திய கல்வி அமைச்சகம் மறுஆய்வு செய்கிறது.
கன்ஃபூசியஸ் கல்வி மையங்களை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் கூட்டிணைவோடு சீனாவிலும் வெளிநாடுகளிலும் கட்டமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கூட்டிணைவிற்கான நிதியை சீனாவின் கல்வி அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்ற ஹான்பென் (சீன மொழிக்கான சர்வதேச கவுன்சில்) அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீன மொழி மற்றும் பண்பாட்டை உலகளவில் பயிற்றுவிக்கும் இந்த நடவடிக்கை, தற்போது சீனாவின் உலகளாவிய அளவிலான ஊடுருவல் காரணமாக விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட கன்ஃபூசியஸ் மையத்தின் பயிற்சி, ஹான்பென் நிதியின் மூலம் கட்டமைக்கப்பட்டு பல்கலைக்கழகங்களால் மேற்பார்வையிடப்பட்டது. உலகளவில் இம்மையம் செயல்படும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் கூட்டிணைவு மூலம் செயல்பட்டு வந்தது. இதற்கான நிதியை ஹான்பென் மற்றும் பயிற்சி நடத்தும் மையங்கள் பங்கிட்டு வந்தன.