உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் சீனா:
இதுவரை இல்லாத அளவு, கடுமையான எதிர்மறை விமர்சனங்களை பல்வேறு தளங்களில் தற்போது எதிர்கொண்டு உலக அரங்கில் சீனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியொரு ஆளாக எட்டுத்திக்கும் கம்பு சுற்றி வருகிறது.
ஹாங்காங், திபெத், ஸின்ஞ்சியாங் ஆகிய பகுதிகளில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், தென்சீனக் கடலில் வல்லாதிக்க விரிவாக்க செயல்பாடுகள், வளர்ந்த நாடுகளுடன் வர்த்தக முரண்பாடுகள், கரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல்களை தவறாக கையாண்டது, பெரிதாகப் பேசப்பட்ட உலகை ஒன்றிணைக்கும் ’ஒரே மண்டலம், ஒரே சாலை’ (BRI) திட்டம், இந்திய எல்லைக்குள் ஊடுருவல், நேபாளத்தின் உள்நாட்டு அரசியலில் தலையீடு என்பவற்றோடு சேர்ந்து ’கந்துவட்டி - கடன்வலை ராஜதந்திரம்’, சீனாவை பெருவாரியான நாடுகளிடம் இருந்து அந்நியப்படுத்தி தனிமைப்படுத்தியுள்ளது.
கந்துவட்டி கடன்வலை:
இந்த கந்துவட்டி கடன்வலை ராஜதந்திரம் என்னும் சொற்றொடரை உருவாக்கியது புது டெல்லியைச் சேர்ந்த புவி அரசியல் வல்லுநரும் எழுத்தாளருமான பிரம்ம செலானி ஆவார். ஆப்பிரிக்க நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள, சீனா கையாண்டுவரும் நிதியுதவிக் கொள்கைகளைக் குறித்திட 2010ஆம் ஆண்டு வாக்கிலேயே இந்தப் பதத்தை அவர் பயன்படுதலானார்.
ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி இன்று உலகளாவிய அளவில் சீனா இத்தகைய கடனுதவி அளித்துவருகிறது. எத்தகைய கடனுதவி என்றால், வழங்கப்படும் பாணியும் நிபந்தனைகளும் கடன்பெறும் தேசங்களில், சீனா வலுவாகக் காலூன்றி அந்த நாடுகளின் வளங்களை வளைத்துப்போட வழிவகுக்கிறது. மேலும், தனது நலனைப் பாதுகாக்க அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது.
அதிக வட்டி, ஆட்சியாளர்களுக்கும் வலை:
ஆச்சரியம்தான் ஆனால் இது எப்படி சாத்தியமென்ற கேள்வி எழுகிறது. குறைவான வருவாய் உள்ள வளரும் நாடுகளையே சீனா குறிவைக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்காக பன்னாட்டு நிதி நிறுவனங்களான பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை கடனுதவி அளிப்பதில் கறாரான நடைமுறைகள் உண்டு.
திட்டங்களைக் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்க வேண்டும், வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பவற்றோடு கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி அவசியம். இத்தகைய நடைமுறைகள், நிபந்தனைகள் காரணமாக கடன் பெற இயலாத நாடுகள், அந்நிய நிறுவனங்களிடம் கடன் வேண்டி சரனடைகின்றன.
பண பலம் மிக்க சீன நிறுவனங்கள், தாங்கள் உள்ளே நுழைய இந்த சூழலைப் திறம்படப் பயன்படுத்துகின்றன. உற்பத்தித் துறையிலும் ஏற்றுமதியிலும் உலக அளவில் கோலோச்சுவதால், சீன பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து நிதி ஆதாரம் பெருகியுள்ளது.
எனவே, சீன அரசும், வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் அயல் நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்த முனையும் நிறுவனங்களுக்கு கடனுதவி அளிக்க முன்வருகின்றன. அதுவும் அதிக வட்டிக்கு!
உலக வங்கியோ, பன்னாட்டு நிதியமோ முன்வராத நிலையில் சீன அரசும் சீன நிறுவனங்களும் காட்டும் ஆர்வம் சாதாரனமானதல்ல. சோழியன் குடுமி சும்ம ஆடுமா? சர்வதேச நிதி நிறுவனங்களின் வட்டி விகிதம் 3-4% என்ற அளவில் உள்ளபோது, சீன அரசோ சீன நிறுவனங்களோ கடனுதவி தருவது 6% வட்டிக்கு! சற்றேரக்குறைய இருமடங்கு வட்டி!
ஒரு நாடு கடன் வாங்கிய பின்னர்தான் சீனாவின் ஆட்டம் ஆரம்பமாகிறது. கடனுதவி அளிக்கும் சீன வங்கியோ, தனியார் நிதி நிறுவனமோ, கடனுக்குப் பிணையாகப் பெறுவது எவற்றை தெரியுமா? நிலம், சுரங்கம் வெட்டுவதில் சலுகை மற்றும் முன்னுரிமை, எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் குத்தகை அல்லது வர்த்தகத்தில் முன்னுரிமை. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம், ஆனால் நடைமுறை ஒன்றுதான்.
கடனுதவியைக் கொண்டுவரும் சீன நிறுவனம் திட்டத்திற்கு அதிகப்படியான மதிபீட்டை முன்வைக்கும். இருப்பினும், அதற்கே டெண்டர் கிடைக்கும். திட்டத்திற்கான நிதி ஆதராத்தைக் கொண்டுவருவதாலும், ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் தருவதாலும் சீன நிறுவனங்களின் கையை விட்டு திட்டம் எங்கும் போகாது. இவ்வறு வெளிப்படைத் தன்மையயற்ற, நேர்மையற்ற வணிக நடைமுறைகளை சீன நிறுவனங்கள் கையாளுகின்றன.
எல்லாம் சீனமயம்:
கடனுதவிக்கான பிற நிபந்தனைகள் இன்னும் மோசமானவை. அவற்றுள் முக்கியமானவை: சீன நிறுவனங்களே ஒப்பந்ததாரர்களாக இருத்தல் வேண்டும், சீன கருவிகள் மற்றும் இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும், திட்ட மேலான்மைக்கு சீன நிறுவனங்களையே அமர்த்த வேண்டும், மேலும் பெரும்பாலான பணிகளில் சீன தொழிலாளர்களையே பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறாக, திட்ட மதிப்பீடே அதிகம் என்னும் நிலையில், செலவினங்களில் பெரும் பகுதி ஒப்பந்ததாரருக்கே சென்றுவிடுகிறது. இதற்கடுத்து, கடன் பெற்ற நாடு, கடனையோ, தவனையையோ உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த காலதாமதம் ஆகும்பட்சத்தில், பிணையாகக் காட்டப்பட்டவை கையகப்படுத்தப்படும்.
இந்த நடைமுறை, இந்திய கிராமங்களில் நிலவும் கந்துவட்டி முறைக்கு நிகரானது என்றால் மிகையில்லை. ஆனாலும், சில அரசியல் பார்வையாளர்கள் சீனா இத்தகைய முறையற்ற சந்தேகத்துக்குரிய வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை என சீனாவுக்கு ஆதரவாக வாதிடுகிறார்கள்.
இருந்தபோதிலும், சீனாவின் செயல்பாடுகள் அதன் உள்நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. வெளிப்படைத்தன்மையற்ற ஓளிவு மறைவான ஒப்பந்தங்கள், அடிக்கடி திட்ட மதிப்பீட்டை உயர்த்தி செலவினத்தைக் கூட்டுவது, இடையில் ஒப்பந்தக்காரர்கள் திட்டத்தையே அம்போவெனக் கைவிடுவது மற்றும் பிணைய சொத்துக்களைக் கையகப்படுத்துவது என்பன எல்லாம், சீனாவின் உண்மையான நோக்கத்தினை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.