ஹைதராபாத்: அண்டை நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் கூட்டுமுயற்சித் திட்டங்களைத் திருட்டுத்தனமாக ஊடுபுகுந்து சீர்குலைப்பது சீனாவுக்கு கைவந்த கலை; போதைப்பழக்கத்திற்கு நிகரான ஒரு கலை அது. அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுதான் கிழக்கு கொள்கலன் முனையம் (ஈஸ்ட் கண்டெய்னர் டெர்மினல் - ஈசிடி) என்ற ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அரசு எடுத்த முடிவு.
கொழும்புவில் கிழக்கு கொள்கலன் முனையத்தை உருவாக்குவது சம்பந்தமாக 2018இல் மைத்ரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி நிர்வாகத்தின்போது இந்தியா-ஜப்பான்-இலங்கை ஆகிய நாடுகள்ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன, அந்தக் காலக்கட்டத்தில் மகிந்த ராஜபக்ச சிறிசேனவின் தலைமையிலிருந்த இலங்கை சுதந்திரா கட்சியிலிருந்து (ஸ்ரீலங்கா ஃபிரீடம் பார்ட்டி – எஸ்எல்எஃப்பி) விலகிப் போயிருந்தார்.
அந்தக் கட்சியோடு கைக்கோத்து ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தியா, ஜப்பான் என்ற கூட்டாண்மை நாடுகளோடு ஒரு ஒத்துழைப்பு வரைவுக்குறிப்பை (மெமோரண்டம் ஆஃப் கோஆப்பரேஷன்) சாத்தியமாக்கினார்.
அந்தப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைத்து ஈஸ்ட் கண்டெய்னர் டெர்மினல் திட்டத்தின் பலனை இலங்கைக்கு அதிகரிக்கச் செய்வதுதான் ஒப்பந்தத்தின் அதிமுக்கிய நோக்கம். இந்தக் கூட்டாண்மை (பார்ட்னர்ஷிப்) திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருந்தால், இலங்கை அரசுக்கு, திட்டத்தின் நூறு விழுக்காடு உடமையும், திட்டத்தின் செயல்பாட்டில் 51 விழுக்காடு கூட்டாண்மை பங்கும் கிடைத்திருக்கும். ஆனால் சீனாவுடன் இலங்கை கொண்டிருந்த மற்ற திட்டங்களில் ஆசியாவின் பொருளாதார ஜாம்பவனாக இருந்து மிரட்டும் சீனா மட்டுமே பெரும்பங்கைக் கொண்டிருந்தது.
ஆனாலும் ராஜபக்ச சகோதாரர்கள் இந்த ஈசிடி முக்கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஓர் எதிர்மறை பரப்புரையை நிகழ்த்திக் காட்டினார்கள். அது திட்டத்தை தீய சாத்தானாகக் காட்டியது மட்டுமல்லாமல், 2020 தேர்தலில் அவர்களுக்கு எதிரிகளை வெல்லும் பலத்தையும் கொடுத்தது. மேலும் அது கொழும்புத் துறைமுகத்தில் உருவாக இருந்த கண்டெய்னர் டெர்மினல் சம்பந்தமான ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்க, போராடிக் கொண்டிருந்த, எளிதில் ஏமாறக்கூடிய துறைமுகச் சங்க ஊழியர்களை மேலும் தூண்டியது.
அந்தப் பிரச்சினை ராஜபக்சவின் தேர்தல் பரப்புரையில் ஒரு பாகமாக இருந்தது. தான் அந்த ஈசிடி ஒப்பந்தத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதாக அவர் போராட்டத் தொழிலாளர்களுக்குத் தேர்தல் வாக்குறுதி அளித்தார். ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், அந்தத் தீவு தேசத்தில் இந்தியா சம்பந்தமான பல விஷயங்கள் மாறிவிடும் என்பது நிதர்சனமானது.
கிழக்கு கொள்கலன் முனையம் என்ற ஈசிடி திட்டம் சீனாவுக்கு நெருடலாகவும், உறுத்தலாகவும் இருந்தது. ஏனெனில் அந்த முனையம் ஏற்கனவே சீனா இலங்கையோடு கூட்டாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கொழும்பு அகில உலக கொள்கலன் முனையத்தின் (கொழும்பு இன்டர்நேஷனல் கண்டெய்னர் டெர்மினல்) அருகில் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கொழும்பு டெர்மினலில் சீனாவின் அதிகபட்ச பங்கு 84 விழுக்காடு.
அண்டை நாடுகளிலும் அவற்றிற்கு அப்பாலும் சீனா தனது ஆதிக்கப் பாதத் தடங்களை ஆழமாகப் பதித்து எப்படி மற்ற நாடுகளின் நலன்களை காலில் போட்டு மிதித்து வளர்ந்தது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் அவற்றிற்கு அப்பாலும் தனது பொருளாதார, அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஆகப்பெரிய சாலைகளின் வலைப்பின்னலை உருவாக்கும் இலக்குடன் சீனா மிகப்பெரிய ‘பெல்ட் அண்ட் ரோட்ஸ் இனிஷியேட்டிவ்’ என்ற மிகப்பெரிய முயற்சியையும், பின்பு கடல் வணிகப் பாதைகளையும் உருவாக்கும் முயற்சியையும் எடுத்தது.