தமிழ்நாடு

tamil nadu

எல்லைப் பகுதியில் ராணுவத்தைத் திரும்பப் பெற்ற சீனா...!

By

Published : Jul 7, 2020, 8:53 PM IST

டெல்லி: கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது ராணுவத்தை திரும்பப் பெற்று தற்காலிக கூடாரங்களை நீக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லைப் பகுதி
எல்லைப் பகுதி

இந்திய, சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கில், இரு நாட்டு ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சீன தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்ததாக அந்நாடு ஒப்பு கொண்டது. இதனிடையே, கிழக்கு லடாக் பகுதியில் 20,000 ராணுவ வீரர்களையும் ,வடக்கு சிஞ்சியாங் பகுதியில் 10,000 ராணுவ வீரர்களையும் சீனா குவித்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவந்தது. பதற்றத்தை குறைக்கும் நோக்கில், உயர் மட்ட ராணுவ அலுவலர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.

இதன் தொடர்ச்சியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர்.

இதன் விளைவாக, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவதாக இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. இந்நிலையில், ஹாட் ஸ்பிரிங், கோக்ரா பகுதிகளில் சீனா தனது ராணுவத்தைத் தொடர்ந்து திரும்பப் பெற்று வருவதாகவும், ராணுவ வீரர்கள் அமைத்த தற்காலிக கூடாரங்களை நீக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த இரண்டு நாள்களில் திரும்பப் பெறும் நடவடிக்கை முழுவதுமாக நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. இதனை, இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த எட்டு வார காலமாக, இந்த இரண்டு பகுதிகளில்தான் ராணுவ வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். திரும்பப் பெறும் நடவடிக்கையின் முதல் கட்டம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, உயர் மட்ட ராணுவ அலுவலர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சிபிஐக்கு மாறும் சாத்தான்குளம் வழக்கு

ABOUT THE AUTHOR

...view details