இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) கொள்கையில் சமீபத்தில் முக்கிய கொள்கை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா என்ற வங்கி இந்திய தனியார் வங்கி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி. பங்குகளை வாங்கியப் பிறகு இந்த முடிவை இந்திய அரசு எடுத்தது.
உண்மையில், சமீபத்திய திருத்தம் நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்த நடவடிக்கை இந்திய நிறுவனங்கள் மீதான மூலோபாய பிடியில், அதன் முயற்சியைத் தடுத்ததால் சீனா மட்டுமே கோபமடைகிறது.
இந்தியாவின் 18 முக்கிய தொடக்கங்களில் சீன முதலீடுகள் ரூ.30 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ப்ரூக்கிங்ஸ் இந்தியா அறிக்கையின்படி, பல சீன நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் முதல் ஆட்டோமொபைல்கள் வரை பலதரப்பட்ட இந்தியத் தொழில்களில் அதிக முதலீடு செய்துள்ளன. சீன நேரடி முதலீடுகளைக் கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 800 ஆக உள்ளது.
தற்போது உலகளவில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியைச் சீனா தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், ஏற்கனவே தங்கள் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றங்களைச் செய்துள்ளன.
சீனா தனது சித்து விளையாட்டை பிரயோகப்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் அந்த நாடுகள் கோபமடைந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவும், சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ளது அந்நாட்டை மேலும் கோபமடையச் செய்துள்ளது. இதனால் பொறுமை இழந்து ஒரு படி மேலே சென்று, சீனா அந்நிய நேரடி முதலீட்டை தடை செய்வது பாரபட்சமானது என்று அறைக்கூவல் விடுக்கிறது.