முகுந்த்வாடி கிராமத்தின் நிலை
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் முகுந்த்வாடி என்னும் குக்கிராமத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்நிலையில், இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழை கடந்தாண்டு சராசரியை விட 14 விழுக்காடு குறைவாகவும் நீர்நிலைகள், ஆழ்துளைக் கிணறுகள் வறண்டும் காணப்படுகின்றன. பருவமழை நாட்டின் பல பகுதிகளில் வெளுத்துவாங்கி வெள்ளக்காடாக மாற்றிய நிகழ்வுகளையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், இக்கிராமத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையே நிலவிவருவது வேதனையான விஷயம்.
தண்ணீருக்காக குழந்தைகள் குழு ரயில் பயணம்
இக்கிராமத்தில் தனது தாய் தந்தையுடன் வசித்துவருபவர் சாக்ஷி கருட் (9) என்ற சிறுவன். சாக்ஷி கருட் தனது அண்டைவீட்டுச் சிறுவன் சித்தார்த் தாகேவுடன் இணைந்து அக்கிராமத்தைச் சேர்ந்த தங்கள் வயதையொத்த மற்றச் சிறுவர்களைக் குழுவாக ஒன்றிணைத்து 14 கி.மீ. தொலைவு ரயிலில் சென்று வீட்டிற்குத் தேவையான தண்ணீர் எடுத்துவருகிறார்.
சிறுவன் சாக்ஷி கருட் வசிக்கும் பகுதி குடிசைகள் நிறைந்த பகுதியாக மிகுந்த அடத்தியுடன் இருக்கும். சிறுவன் வீட்டிலிருந்து ரயில் நிலையத்திற்கு 200 மீட்டர் நடந்து செல்ல வேண்டும்.
இது குறித்து சாக்ஷி கருட்டும் அவரது நண்பரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
சாக்ஷி கருட்:இது எனது அன்றாட வழக்கம்; ஆகையால் இது எனக்கு பழகிவிட்டது என இயல்பாக கூறுகிறார். மீண்டும் பேச்சைத் தொடரும் சாக்ஷி, பள்ளியிலிருந்து வந்தவுடன் எனக்கு விளையாட நேரம் கிடைப்பதில்லை என்றும் முதலில் தனக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் எனவும் கவலையுடன் தெரிவிக்கிறார்.
டேஜ்: தண்ணீரைக் கொண்டுவருவதில் நேரத்தைச் செலவிட எனக்குப் பிடிக்கவில்லை; இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லையே என வருத்தம் தோய்ந்த குரலில் சொல்கிறார்.
ரயிலில் குடங்களில் தண்ணீர் நிரப்பும் குழந்தை நரேந்திர மோடி குடிநீர் திட்டம்
இங்கிலாந்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான வாட்டர் ஏட் ஆய்வின்படி, "12 விழுக்காடு இந்தியர்களுக்கு (சுமார் 163 மில்லியன் மக்கள்) சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. இது எந்த நாட்டிலும் ஏற்படாத அதிகபட்ச விழுக்காடாகும்" எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சிக்கலை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி 2024 ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்திய குடிமகன் வீட்டிற்கும் குடிநீர் குழாய் கொண்டுவர ரூ 3.5 டிரில்லியன் மதிப்பில் திட்டமிட்டிருக்கிறார்.
வாட்டர் ஏட் நிறுவன ஆய்வை உறுதிப்படுத்தும்சாக்ஷியின் தந்தை
தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கட்டுமானத் தொழிலாளியான சாக்ஷியின் தந்தை கூறுகையில், "எங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குழாய் நீர் கிடைப்பதில்லை. அதனால் பலர் தனியார் நீர் வழங்குநர்களை (சப்ளையர்) நம்பியுள்ளனர்.
எங்கள் பகுதி மக்கள் கோடை காலங்களில் ஐந்தாயிரம் லிட்டர் டேங்கருக்கு தோராயமாக மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனக்கு ஒவ்வொரு நாளும் வேலை கிடைப்பதே மிகவும் கடினம். அதனால் தனியாரிடம் நீர் வாங்குவது என்பதே இயலாத காரியமாக உள்ளது. இப்போதெல்லாம், மளிகைச் சாமான்களை வாங்குவதற்கே போதுமான பணம் கிடைப்பதில்லை. பின்னர் எப்படி தனியார் சப்ளையர்களிடமிருந்து தண்ணீர் வாங்க முடியும்" என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.
ரயில் பயணத்தின் சிக்கல்கள்
இதன் காரணமாக அருகிலுள்ள அவுரங்காபாத்திலிருந்து தண்ணீர் எடுக்க சிறுவர்கள் தினமும் ரயிலில் செல்கிறார்கள். ரயில் பெரும்பாலும் நெரிசலானது. எனவே சிறு குழந்தைகளின் ஒரு குழு தண்ணீர் நிரப்ப குடங்களுடன் ஏற வேண்டும். இது எப்போதும் வரவேற்கப்படுவதில்லை.
ரயில் தண்ணீருக்காக காத்திருக்கும் குழந்தை "சிலர் எங்களுக்கு உதவுகிறார்கள், சிலர் ரயில்வே அலுவலர்களிடம் ரயில் கதவு அருகில் குடம் வைப்பதாகப் புகார் கூறுகிறார்கள். நாங்கள் குடங்களை ரயில் கதவு அருகில் வைக்காவிட்டால், ரயில் நிறுத்தும்போது அவற்றை விரைவாக வெளியே எடுக்க முடியாது" என்று கூறுகின்றனர் தண்ணீர் எடுக்கச் செல்லும் சிறுவர்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இப்படி தண்ணீருக்காக ரயில் பயணம் மேற்கொள்வது மிகவும் வேதனையளிக்கும் வகையில் உள்ளது.
இதையும் படிங்க:
"தவிக்குதே...தவிக்குதே" - இது திருச்சி அருகே நீரின்றி தவிக்கும் ஓர் கிராமத்தின் குரல்!