டெல்லி: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடனுதவி அளிக்க முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசியப் பணிகள் தவிர அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் அடியோடு முடங்கிப்போய் உள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவின் பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் அதன் 6 கடன் அளித்த திட்டங்களை மூடிவிட்டது. இதனால், அதன் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்த மத்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி கடனுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
இதனை முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பொருளாதார நிபுணருமான ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார். இதன் மூலம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு எந்தவிதமான அசவுகரிய செயல்பாடுகளிலும் ஈடுபடாமல், தங்களின் ஃபண்டுகளை நிலையாக கவனித்துக்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் முதலீட்டாளர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்துள்ளார்.