கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இதனால், இந்தியாவில் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் நோக்கில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அமல்படுத்தப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டம் குறித்து நேற்று விவரித்தார்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன்பெறுவதற்கான உத்திரவாதத்தை அரசே வழங்கும் எனத் தெரிவித்த நிர்மலா, அதற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள சிதம்பரம், தொழிலாளர் வர்க்கத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் என்றார். இது குறித்து அவர் கூறுகையில், "ஆயிரம் கிலோமீட்டர் தள்ளியுள்ள தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் நிதியமைச்சர் அறிவித்த திட்டத்தில் ஒன்றும் இல்லை. தினமும் உழைப்பவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் இது.
மக்கள் தொகையில் பொருளாதார ரீதியாக பின்தங்கி வறுமையில் சிக்கித் தவிக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு பணப்பரிமாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரும் முதலீடுசெய்யும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே திட்டங்கள் உள்ளன.
மீதமுள்ள 6.3 கோடி சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படாமல் தவிக்கவிடப்பட்டுள்ளன. துணைக்கடன் (நிதிக்குள் நிதி) வழங்குவதை வரவேற்கிறோம். ஆனால், எம்மாதிரியான நிபந்தனைகள் விதிக்கப்படும் என்பது குறித்து ஆராயப்படும். 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் 3.6 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 16.4 லட்சம் கோடி எங்கே?" என்றார்.
இதையும் படிங்க: 'கரோனா இயற்கையானதல்ல' - நிதின் கட்கரி