சத்தீஸ்கர் மாநிலம், ஜஷ்பூரில் ஜப்லா கிராமத்தில் வசிக்கும் கர்ப்பிணிக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்தக் கிராமத்திற்கு உள்ளே வர சாலை வசதி இல்லாததால், ஆம்புலன்ஸ் வர இயலாமல் பிரதான சாலையிலேயே நின்றுள்ளது.
இதையடுத்து, உடனடியாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கர்ப்பிணியை ஒரு கட்டிலில் படுக்க வைத்தபடியே 5 கி.மீ., தூரம் தூக்கிச்சென்று ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீண்ட காலமாக கிராமத்தின் இந்தப் பிரச்னைக்கு அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகின்றனர் எனக் குற்றம்சாட்டுகின்றனர், அப்பகுதி மக்கள்.
இதுகுறித்து பாகிச்சா ஜான்பாட்டின் தலைமை நிர்வாக அலுவலர் வினோத் சிங் கூறுகையில், "இந்தக் கிராமத்தில் ஏற்கெனவே இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அந்த தரவுகளை சேகரித்து வைத்துள்ளோம். இந்தாண்டு இறுதிக்குள் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நிறைவடையும்" என உறுதியாகத் தெரிவித்தார்.
சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 5 கி.மீ. கட்டிலில் தூக்கிச்சென்ற அவலம்! இருப்பினும், கட்டிலில் அழைத்துச்சென்ற பெண்ணுக்கு நல்லபடியாகப் பிரசவம் நடைபெற்று குழந்தைப் பெற்று எடுத்துள்ளார். அவசர நேரத்தில் ஆம்புலன்ஸால் செல்ல முடியாதது பெரும் சிரமத்தை கிராமவாசிகளுக்கு ஏற்படுத்துகிறது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்திலும் கர்ப்பிணியை 5 கி.மீ., தூரம் கட்டிலில் தூக்கிவந்து ஆம்புலன்ஸில் அனுப்பிய சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.