சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரில் வசிப்பவர் ஆதிஷ் தாக்கூர். இவர் பிளாஸ்டிக் இல்லா தேசத்தை உருவாக்க தனது ஸ்டார்ட் - அப் நிறுவனம் மூலம், தனித்துவமான ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து டீ சர்ட்டுகளை உருவாக்கும், புதிய ஸ்டார்ட் - அப் நிறுவனத்தை ஆதிஷ் தாக்கூர் உருவாக்கியுள்ளார். இவரது இந்தத் தனித்துவமான முயற்சியால் 8 முதல் 10 பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு ஒரு டீ சர்ட்டை உருவாக்க முடியும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் டீ சர்ட்களின் கைகளில் இது பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து தயாரிக்கப்பட்டது என்று எழுதப்பட்டிருப்பதுதான்.
இது குறித்து ஸ்டார்ட் - அப் நிறுவனத்தின் தலைவர் ஆதிஷ் தாக்கூர் கூறுகையில், "இந்த டீ சர்ட்கள் தமிழ்நாட்டிலுள்ள சென்னை, ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களில் உற்பத்தி செய்யப்படுகிறன. நாங்கள் தீவிர ஆராய்ச்சி செய்த பின்தான் இப்படி ஒரு டீ சர்ட்டை உருவாக்க முடியும் என அறிந்துகொண்டோம். அதன் பிறகே இதைத் தயாரிக்க உற்பத்தியாளர்களைத் தொடர்புகொண்டோம். நாங்கள் தயாரித்துள்ள இந்த டீ சர்ட்டை ராய்ப்பூர் மாநகராட்சிக்கும் நாங்கள் வழங்கியுள்ளோம். அவர்களும் எங்களது முயற்சியை வெகுவாகப் பாராட்டினர்" என்றார்.
பட்டையைக் கிளப்பும் பிளாஸ்டிக் டீ சர்ட்டுகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் டீ சர்ட்டுகளை போலவே இந்த டீ சர்ட்டையும் பல்வேறு நிறங்களிலும் பல்வேறு டிசைன்களிலும் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் ஒடிசா மாநகராட்சி!