சத்தீஸ்கர் மாநிலத்தில் புதன்கிழமை (மே 13) அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. முதலமைச்சர் பூபேஷ் பாகல் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளின் விளைப்பொருள்களுக்கு நல்ல வருவாயை வழங்குவதற்கும், பயிர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் மே 21 முதல் 'ராஜிவ் காந்தி கிசான் நயோ யோஜனா' திட்டம் தொடங்க முடிவுசெய்யப்பட்டது.
இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் தயாரிக்கப்பட்ட, வெளிநாட்டு மதுபானங்களுக்கும் சிறப்பு 'கரோனா வரி' விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் ஒரு பாட்டிலின் விலை ரூ.10 வரை அதிகரிக்கும். வெளிநாட்டு மதுபானங்களுக்கு 10 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும்.
'ராஜிவ் காந்தி கிசான் நயோ யோஜனா' திட்டத்தின்கீழ், நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை வாங்குவதற்காக நேரடி நன்மை பரிமாற்றத்தின் மூலம் விவசாய உள்ளீட்டு உதவி மானியமாக ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் விவசாயிகளின் கணக்குகளில் வைப்புத்தொகையாகச் செலுத்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.