நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு எதற்காகவும் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மக்கள் பொதுவெளியில் கூடாதவாறு நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள், கோயில் திருவிழாக்கள் என அனைத்து நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவும் நடைபெறுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி, கோயில் தேர் இழுத்து திருவிழா கொண்டாடப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ராவூர் கிராமத்தில் அமைந்துள்ளது சித்தலிங்கேஸ்வரா கோயில். ஒவ்வொரு வருடமும் இந்தக் கோயில் திருவிழா அக்கிராமத்தினரால் விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக திருவிழா நடத்த வேண்டாமென காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.