இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறது. முக்கியமாகக் குறைந்த செலவில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தில் 'கில்லி'தான் நமது இஸ்ரோ. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கூட தங்கள் செயற்கைக்கோளை இந்தியா மூலமே அனுப்ப விரும்புகிறது. அதற்குக் காரணம் செலவு குறைவு மட்டுமல்ல... சக்சஸ் ரேட் எனப்படும் வெற்றி விகிதம். இஸ்ரோ அனுப்பிய பெரும்பாலான ராக்கெட்டுகள் வெற்றிகரமாக இருப்பதன் காரணமாகத்தான் ஆரம்பக் காலங்களில் விண்வெளி தொழில்நுட்பத்தை நம்மிடம் பகிரத் தயக்கம் காட்டிய அமெரிக்காவும் நமது சந்திரயான் 2இல் தங்களது செயற்கைக்கோளை அனுப்பக் கேட்டது.
இன்றிலிருந்து சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2008ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ சந்திரயான் என்கிற செயற்கைக்கோளை அனுப்பியது. வெறும் ரூ.386 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், சுமார் 312 நாட்கள் வரை செயல்பாட்டிலிருந்தது. விண்வெளித் துறையைப் பொறுத்தவரை ரூ.386 கோடி என்பது நாம் கடையில் மிட்டாய் வாங்கும் செலவுக்குச் சமம். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து அனுப்பிச் செய்ததை நாம் வெறும் ரூ.386 கோடியில் செய்து முடித்தோம். அதுமட்டுமின்றி விண்வெளியைப் பற்றி வெளியான ஹாலிவுட் திரைப்படமான 'கிராவிட்டி'யின் பட்ஜெட் ரூ.600 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான்-1இன் வெற்றியைத் தொடர்ந்து சந்திரயான்-2க்கான திட்டமும் தீட்டப்பட்டது. பத்து மாதம் தன் குழந்தையைப் பாதுகாப்பாகச் சுமந்து பெற்றெடுக்கும் தாயைப் போலக் கடந்த 10 ஆண்டுகளாக இஸ்ரோ சுமந்து வந்த தனது இரண்டாவது குழந்தை சந்திரயான்-2. சுமார் ரூ.850 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 திட்டம், சந்திரயான்-1 திட்டத்தைப் போல நிலவின் சுற்று வட்டப்பாதையிலிருந்து மட்டும் ஆய்வுகளைச் செய்யாமல் நிலவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக மிகவும் விரிவான திட்டத்தை இஸ்ரோவானது தயார் செய்துள்ளது. இந்திய ராக்கெட்டுகளின் பாகுபலி, என்றழைக்கப்படும் சுமார் 400 டன் எடையும் 44 மீட்டர் உயரமும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்படவுள்ளது. விரைவில் விண்ணில் பாயவுள்ள நம் பாகுபலி ராக்கெட் சரியாக 15 நிமிடங்கள் கழித்து விண்கலத்தைத் தனியே பிரித்துவிடும். மற்ற நாடுகளைப் போல நேரடியான பூமியிலிருந்து நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பாமல், முதலில் பூமியின் புவி வட்டப் பாதையைச் சுற்ற வைத்து, பின்னர் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குச் சந்திரயான் 2 விண்கலம் அனுப்படுகிறது. இதன் மூலம் நேரடியாக பூமியின் புவிஈர்ப்பை எதிர்த்துச் செல்ல ஆகும் செலவில் ஒரு பகுதியில் இத்திட்டத்தை முடிக்கலாம். இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் ராக்கெட்டில் ஏற்படும் தவறுகளையும் குறைக்க முடியும்.
நமது பாகுபலி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3இலிருந்து பிரியும் விண்கலம் மூன்று முக்கிய பகுதிகளால் ஆனது. முதலாவது, நமது பாகுபலியிலிருந்து பிரியும் விண்கலத்தைப் பத்திரமாக நிலவுக்கு அழைத்துச் செல்வது வட்டமடிப்பான் (Orbitor), இரண்டாவது லேண்டர் எனப்படும் தரையிறங்கி ஆகியவை ஆகும். இது நமது இஸ்ரோவுக்காக மாபெரும் சாதனைகளைப் படைத்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம்தான் சந்திரயான்-2வின் இதயமும் மூளையுமான உலவியைத் (Rower) தாங்கிச்செல்லும். மூன்றாவது மற்றும் முக்கிய பகுதியான இதற்கு பிரக்யான் என்று இஸ்ரோ பெயரிட்டுள்ளது.