குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவந்த போராட்டத்தில் கடந்த மாதம் திடீரென்று வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றணக்கானோர் காயமடைந்துள்ளனர். தற்போதுதான், டெல்லி கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பிவருகிறது.
டெல்லி வன்முறை குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகக் குற்றஞ்சாட்டி, இரு மலையாள செய்தி சேனல்களின் ஒளிபரப்பை மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தடைவிதித்தது. கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள், 1994-ஐ மீறியதால் ஏசியானெட், மீடியா ஒன் ஆகிய சேனல்களின் ஒளிபரப்பு 48 மணிநேரம் தடைசெய்யப்பட்டது. அதன்படி நேற்று மாலை 7.30 மணி முதல் இரு சேனல்களும் தங்கள் ஒளிபரப்பை நிறுத்தின.
மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். குறிப்பாக கேரளாவிலுள்ள எதிர்க்கட்சிகள் ஒலிபரப்புத் துறையின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தனர்.