இது தொடர்பாக மாநிலங்களவையில் ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், "தமிழ்நாடு அரசு ரூ.80 ஆயிரம் கோடி ரூபாயில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை இறுதி செய்துள்ளது. இத்திட்டத்திற்கு பொதுமக்கள் தரப்பில் பொதுவாக வரவேற்பு இருந்த போதிலும், திட்ட வழித்தடத்தில் சில குறைபாடுகள் உள்ளன.
அதாவது, மெட்ரோ ரயில் கொள்கை, 2017-இன் வழிகாட்டுதலின்படி இது அமையவில்லை. தற்போது அமைக்கப்படவுள்ள திட்டத்தில் சென்னைக்கான 2-ஆவது மெட்ரோ ரயில் வழித்தடமானது, டிடிகே சாலை, லஸ் சர்ச் சாலை, கச்சேரி சாலை ஆகியவை வழியாகச் செல்கிறது. இது வசதிபடைத்தவர்கள் வாழும் பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சொந்த போக்குவரத்து வசதியைக் கொண்டுள்ளனர். மூன்று கிலோ மீட்டர் வழித்தடத்தில் அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் ஏதும் இல்லை.
இதனால், திட்டத்தின் நோக்கம் உரிய பயனை அளிக்காது. இப்பகுதி சாலைகள் குறுகலானதாக இருப்பதால், இதர அரசு, தனியார் வாகனங்களின் போக்குவரத்துக்கு மெட்ரோ ரயில் இடையூறை ஏற்படுத்தும்.