இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22ஆம் தேதி நிலவுக்கு அனுப்பியது. இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தின் மூன்று கலன்களில் வட்டமடிப்பான் (ஆர்பிட்டர்) என்று முதலாவது கலன், பூமியை விடுத்து நிலவின் சுற்றுவட்டப் பகுதியை சுற்றிவர அதனை இஸ்ரோ மாற்றி அமைத்ததை அடுத்து அந்தக் கலன் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக சுற்றிவந்துகொண்டிருக்கிறது.
இதன் ஆயுட்காலம் ஓராண்டு வரை என்பதால், வட்டமடிப்பான் நிலவை அடுத்த ஓராண்டு முழுவதும் சுற்றிவந்து, ஆராய்ச்சிக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பும்.
தரையிறங்கும் விக்ரம்
இதையடுத்து வட்டமடிப்பான் கலனிலிருந்து பிரிந்து லேண்டர் என்று கூறப்படும் விக்ரம் நாளை (செப்டம்பர் 7) நிலவில் உள்ள தென்துருவப்பகுதியில் இரவு 1.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் தரையிறங்க உள்ளது. தரையிறங்க லேண்டர் 30-50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
ரோவர் செயல்பாடு
அதன் பிறகு லேண்டரில் உள்ளிருக்கும் ரோவர் என்று சொல்லப்படும் பிரக்யான் ரோபாட்டிக் இயந்திரம் காலை 5.30 மணியிலிருந்து 6.30 மணிக்குள், லேண்டரிலிருந்து வெளியே வரும். அதனையடுத்து அது நிலவின் தென் துருவத்தை ஆய்வை மேற்கொள்ளவுள்ளது. நிலவின் தென்துருவப்பகுதியில் குறைந்த சூரிய வெளிச்சமே படும் என்பதால், அப்பகுதியில் தண்ணீர் மிகுதியாக இருக்கக்கூடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதனை ஆராயவும், மேலும் நிலவில் உள்ள கனிம வளங்கள், நிலவில் ஏற்படும் பூகம்பம் உள்ளிட்ட ஆராய்ச்சியை ரோவர் மேற்கொள்ளவுள்ளது. இதன் ஆயுட்காலம் நிலவில் ஒரு நாளாகும் அதாவது பூமியின் நாள்கணக்கில் 14 நாட்கள் ஆகும்
ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் கனவுத் திட்டமான நிலாவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் சந்திரயான்-2 விண்கலத்தால், நிலவில் வெற்றிகரமாக விண்கலன்களை தரையிறக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாவும் இடம் பெற்று சாதனை படைக்கவுள்ளது.
ரோவர் (பிரக்யான் ரோபாட்டிக் இயந்திரம்)