இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன் - 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இஸ்ரோவின் புதிய படைப்பான சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இம்மாதம் 2ஆம் தேதி சந்திரயான்-2வின் ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. பின், விக்ரம் லேண்டர் விண்கலம் இன்று அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணியளவில் தரை இறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது. இதனை காண்பதற்காக பிரதமர் மோடி இஸ்ரோ விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்தார். மேலும் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதைக் காண நாடு முழுவதும் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவுக்கு 2.1 கி.மீ தொலைவில் இருக்கும் போது அதில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து விக்ரம் லேண்டரின் தரவுகளை ஆராய்ந்து விக்ரம் லேண்டரின் நிலைகுறித்து சரியான தகவல்களை தெரிவிப்பதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்தார். அதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவனைத் தோளில் தட்டிக்கொடுத்து நம்பிக்கையூட்டினார்.
பிரதமர் நரேந்திரமோடி விஞ்ஞானிகள் மத்தியில் பேசுகையில், "நம்பிக்கையை இழக்காதீர்கள். தைரியமாக இருங்கள். வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். நீங்கள் சாதித்தது ஒன்றும் சிறிய விஷயம் கிடையாது. இந்த நாட்டிற்கு மிகப் பெரிய சேவையை ஆற்றியுள்ளீர்கள்.
அதே போல் மனித குலத்திற்கும், அறிவியலுக்கும் மிகப் பெரிய பங்காற்றியுள்ளீர்கள். நான் எப்போதும் உங்களோடு இருக்கிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என உரக்கக் கூறினார்.