நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் உருவாக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு இஸ்ரோவால் தொடங்கப்பட்ட இத்திட்டம் இந்த ஆண்டு முடிவுற்றது. அதன்படி, ஜூலை 22ஆம் தேதி விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையை சுற்றி தன்னுடைய இறுதிப் பணியான லேண்டரை தரையிறக்கத் தயாரானது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சியைக் காண ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்தது. பிரதமர் மோடியும் இஸ்ரோவுக்குச் சென்றார். லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க செயல்படுத்துவதாக இருந்த நான்கு கட்ட செயல்பாட்டில் மூன்று கட்டங்களை இஸ்ரோ திட்டமிட்டபடி செயல்படுத்தியது. இறுதிக் கட்டத்தில் லேண்டர் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கி.மீ. தொலைவிலிருந்தபோது அதன் சமிக்ஞை (சிக்னல்) துண்டிக்கப்பட்டது.
இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகளும் இந்திய மக்களும் மிகவும் வருத்தமடைந்தனர். கிட்டதட்ட 95 விழுக்காடு பணிகள் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் இஸ்ரோ தலைவர் சிவனும் மனமுடைந்து போனார். இருப்பினும், பிரதமர் மோடி அவரை தேற்றினார். மேலும், ஊக்கமளிக்கும் வகையில் பேசி மீண்டும் முயற்சி செய்வோம் என ஆறுதல் கூறினார்.
நாட்டு மக்களும் இஸ்ரோவின் முயற்சியை பாராட்டியும் வாழ்த்துகள் கூறியும் சமூக வலைதளங்களில் ஊக்கமளித்தனர். இந்நிலையில், இஸ்ரோ தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், “தோல்வியிலும் எங்களுக்கு பக்கபலமாக இருந்து ஆறுதல் அளித்த அனைவருக்கும் நன்றி. ஆனால் எங்கள் முயற்சியை கைவிடாமல் அறிவியலை முன்னெடுத்துச் செல்வோம். உலகளவில் இந்தியாவின் தரத்தை உயர்த்தும் கனவு நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள தற்போதுவரை இஸ்ரோ முயற்சி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.