சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று நள்ளிரவு 2 மணியளவில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கவிருந்த 'விக்ரம்' லேண்டருடான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, விக்ரமுடன் தொடர்புகொள்ள இஸ்ரோ, தரவுகளை தொடர்ந்து ஆராய்ந்துவருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக ஹைதராபாத் பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் சித்தார்த் நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அவர் அளித்த பேட்டியை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
"நிலவின் தரைப்பரப்பு பூமியைப் போன்றதல்ல. பூமியில் கூட இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. லேண்டர் மீது ஏதேனும் ஒரு பொருள் விழுந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதா, நிலவில் விழும் கதிர்வீச்சு உள்ளிட்ட காரணத்தால் நடந்ததாக என்பது இன்னும் தெரியவில்லை. இது தொடர்பான தரவுகள் ஆராயப்பட்டுவருகிறது.
'விக்ரம்' லேண்டர் மீண்டும் தொடர்பில் வருவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. எனினும், சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைவில்லை. சந்திரயான் 2இன் வட்டமடிப்பான் தொடர்ந்து ஓராண்டுக்கு தகவல் பரிமாறவுள்ளது. விக்ரமுடன் தொடர்புகொள்ள இஸ்ரோ தொடர்ந்து முயற்சிக்கும். இதற்கு நீண்ட காலம் ஆகலாம். இதில் அவசரம் ஒன்றும் இல்லை" என்றார்.