ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்.
இந்த போராட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக தனது குழுவினருடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனக்கோரி மனு அளித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறுகையில்,
"டெல்லியில் நேற்று நாங்கள் போராட்டம் நடத்தினோம். தர்ணா போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்ளாத போது, அதற்கு பொறுப்பானவர்கள் அரசை எதிர்கொண்டு சண்டை புரிய வேண்டும். அதுதான் நேற்று நடந்தது. சுதந்திரம் கிடைத்ததிலிருந்து துரதிஷ்டவசமாக ஆந்திராவுக்கு இதுவரை நான்கு தலைநகர்களை நாங்கள் பார்த்து விட்டோம். தேர்தல் நேரத்தில் அவர்கள் எல்லாவிதமான வாக்குறுதிகளையும் வழங்கினார்கள்" எனக் கூறினார்.
முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும், பாஜக கட்சியும் இணைந்து போட்டியிட்டன. தேர்தல் சமயத்தில் ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து உறுதியாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த பாஜக கட்சி, அதை செயல்படுத்தாத காரணத்தால் அதிருப்தியடைந்த சந்திரபாபு நாயுடு 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்.