அமராவதி:ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் கோயில்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அரசு மீது சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெகன்மோகன் ரெட்டியின் அடக்குமுறை ஆட்சியின் கீழ் மக்களின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, கோயில்களுக்கும் சிலைகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை.
விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ராமதீர்த்தம் மலையில் ராமரின் சிலை அண்மையில் இடிக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. நான்கு நூற்றாண்டுகள் பழமையான ராமதீர்த்தம் கோயிலில் சிலைகளை இடிப்பது ஆளும் கட்சியின் மொத்த அலட்சியத்தின் விளைவாகும்.
கோயில்கள் மீதான தாக்குதல்களைப் பார்வையாளரைப் போல் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பார்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த 19 மாதங்களில் மட்டும் கோயில்கள் மீது 120 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.
ராமதீர்த்தம் சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.