மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியதை செல்லாது என அறிவிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 9ஆம் தேதி ரத்து செய்தது.
இரண்டாக பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது.
ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கான அதிகாரம் 2020 வரை இருந்த நிலையில் 2018ஆம் ஆண்டு டிசம்பரில் காஷ்மீர் சட்டப்பேரவை இடைநீக்கம் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
காஷ்மீர் மாநில சட்டப்பேரவையுடன் கலந்தாலோசனை செய்யப்படவில்லை. போர், வெளியுறவு பிரச்சனை காலங்களில் மட்டுமே மத்திய அரசு மாநில அரசின் விவகாரத்தில் தலையிட முடியும் எனச் சட்டப்பிரிவு 35ஏ தெளிவாகக் கூறுகிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் உள்விவகாரங்களில் மத்திய அரசு தலையிட முடியாது.
புதிதாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதாக இருந்தால் உரிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை அடிப்படையில் மட்டுமே புதிய மாநிலம் உருவாக்க முடியும்.
அரசியலமைப்புச் சட்டம் 368இன்படி ஒரு மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்றால்,
* சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்,
* புதிய மாநிலத்திற்கு முதலில் எல்லைகள் மறுவரையறை செய்ய வேண்டும்,
* எல்லைகளை அதிகப்படுத்துவது, குறைப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்,
* புதிய பகுதிகளை கூடுதலாக இணைத்து புதிய மாநிலம் உருவாக்கலாம்
மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் மத்திய அரசு அதீத அதிகாரத்தை பயன்படுத்தி காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை ரத்து செய்துள்ளது. அதனால் வழக்கு முடியும்வரை யூனியன் பிரதேசமாக மாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மத்திய அரசின் தன்னிச்சையான முடிவை செல்லாது என அறிவிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை தாங்கள் எதிர்க்கவில்லை. காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரம் இந்த உத்தரவால் பாதிக்கப்படும் எனவும் நாளை தமிழ்நாடும் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படலாம் என்பதால் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வாதம் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள், காஷ்மீருக்கான 370 சிறப்புத் தகுதி ரத்து செய்யப்படுவதால் மனுதாரருக்கு என்ன பாதிப்பு, காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறினாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தானே இயங்குகிறது என தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மத்திய தொழிற்படையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!