மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புதன்கிழமை (மே 13) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “மத்திய அரசு அறிவித்த சிறப்புப் பொருளாதார தொகுப்பு ஒரு பெரிய பூஜ்ஜியத்தைத் தவிர வேறில்லை.
இது மக்களை முட்டாளாக்குவதற்கான ஒரு கண் துடைப்பு ஆகும். அமைப்புசாரா துறை, பொதுச்செலவு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றிற்கு இந்தத் திட்டத்தில் எதுவும் இல்லை.
மாநில அரசின் நலன்சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லை. நிதியமைச்சர் சிறப்புப் பொருளாதார அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக நாங்கள் சில நன்மைகள் நடக்கும் என்று நம்பினோம்.
ஆனால் தற்போது எதுவும் நடக்காது. அனைத்தும் மோசடி என்று உணர்ந்துகொண்டோம்” என்றார். மேலும், மத்திய அரசு நாட்டு மக்களைத் தவறாக நடத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, கரோனா பொது அடைப்பு காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ரூ.20 லட்சம் கோடி சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தை அறிவித்தார்.
இந்தத் திட்டம் தொடர்பான தகவல்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை மாலை நான்கு மணிக்கு நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.
சிறு, குறு தொழில்கள், மின்சாரம், வரி, கட்டுமானம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏழைகள், தினக்கூலிகள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
இதையும் படிங்க: கேரளாவில் 5 சிறுமிகளைக் கைதுசெய்யக்கோரிய சிறுவன்: காவலர்கள் அதிர்ச்சி!