கோரேகான் பீமா கலவர வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் என நீண்ட நாள்களாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறிவந்தார். இந்நிலையில், அவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மத்திய அரசு மாற்றியுள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டை அதிரவைத்த 'பீமா கோரேகான்' கலவர வழக்கின் தற்போதைய நிலை என்ன?
இதுதொடர்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், ”கோரேகான் பீமா வழக்கை என்ஐஏக்கு மத்திய அரசு மாற்றியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு இவ்வழக்கை மாற்றியுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது” என்று விமர்சித்துள்ளார்.
வழக்கை என்ஐஏக்கு மாற்றும் பட்சத்தில், அவ்வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் என்ஐஏக்கு அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் கோரேகான் பீமா என்ற இடத்தில் உள்ள போர் நினைவுத்தூணுக்கு 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அஞ்சலி செலுத்தவந்த பட்டியலின மக்களை, ஆதிக்க சாதியினர் தாக்கி கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கின் நிலை குறித்து துணை முதலமைச்சர் அஜித் பவாரும் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கும் மூத்த காவல் அலுவலர்களை நேற்று முன்தினம் சந்தித்த நிலையில், வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது.