குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்த மசோதாவை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த வேளையில், மற்றொரு விவகாரமும் பூதாகரமாக எழ தொடங்கியுள்ளது. அண்மையில் அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டு (என்.ஆர்.சி.) விவகாரம்தான் அது. அசாமில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின்படி 19 லட்சம் பேர் தங்களது குடியுரிமையை இழந்தனர்.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மத்திய அரசு என்.ஆர்.சி.யை அமல்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைச் செயல்படுத்துவதற்கு முன் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்காக (என்.பி.ஆர்.) வீடுவீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்து, அதன்மூலம் தேசிய குடியுரிமை பதிவேட்டை நடைமுறைப்படுத்தப்படும் என்ற செய்தியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தியை உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட சில அமைச்சர்கள் மறுத்து வந்தாலும் இது வெறும் வதந்தி அல்ல உண்மைதான் என்கிறார் காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான்.
இதுதொடர்பாக அவர் மேலும்கூறுகையில், “என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்துவதற்கான முதல் படி என்.பி.ஆர்.யை நடைமுறைப்படுத்துவது என்று உள்துறை அமைச்சகத்தின் 2018-19ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை 2014ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சிக்கு வந்தபோதே தெளிவாகக் கூறிவிட்டார்கள். முதலில் அவர்கள் என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கூறினார்கள். இப்போது என்.பி.ஆர். என்ற போர்வையின் மூலம் என்.ஆர்.சி.யை அமல்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்” என்றார்.