இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து மோசமடைந்துவருகிறது. குறிப்பாகக் கடந்த வாரம் சென்னை, மும்பை, போபால் ஆகிய நகரங்களில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "அச்சமற்ற நமது செய்தியாளர்களை இந்த வைரஸ் தொற்று தாக்கியுள்ளது பெரும் துரதிர்ஷ்டவசமான ஒன்று.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் செய்தியாளர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க வேண்டும். அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். வைரஸ் தொற்றால் அவர்கள் விடுப்பில் இருக்கும்போதும் முழு ஊதியம் வழங்க வேண்டும்.
சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போல செய்தியாளர்களுக்கும் மருத்துவ காப்பீட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். செய்திகளைச் சேகரிக்கக் களத்திற்குச் செல்லும்போது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைக் கட்டாயம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும்.
செய்தியாளர்கள் தங்கள் கடமையைச் சுதந்திரமாகவும், உண்மையாகவும், மேற்கொள்ளவும் தகவல்கள் சரியான நேரத்தில் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகளை அவசியம் நாம் மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுபானம் விற்க அனுமதி? - உள் துறை அமைச்சகம் பதில்!